ஆய்வு விளக்கம்
கி.பி. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வளரத் தொடங்கிய இலக்கிய வடிவம் நாவலாகும். அன்றைய நிலையில் - ‘புதுமை’ என்ற பொருளில் வழங்கத் தொடங்கிய சொல்லே நாவலாகும். புனைகதைவடிவம் என்று தமிழ் இலக்கியம் அதனை ஏற்றுக் கொண்டது. பின்னர்‘புதினம்’ என்ற சொல் ‘நாவல்’ என்ற சொல்லுக்கு இணையாக இலக்கிய வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. மேலைநாட்டின் இலக்கியத் தாக்கம் தமிழ் இலக்கிய ‘நாவல்’ எனவும் பிரதிபலித்தது. கதைக்கரு, பாத்திரங்கள் உத்திகள், தெளிபொருள் எனப் பல்வேறு நிலைகளில் நாவல்கள் பகுக்கப்பட்ட போது நாவல்களின் வகைகளும் அவற்றிற்கு ஏற்றாற்போல் பரந்து விரிந்து வளரத் தொடங்கின.
சமூகம், வரலாறு என்னும் இருபிரிவுகளில் தொடக்க காலத்தில் அமையப் பெற்ற நாவல்கள், பின்னர்பல்வேறு உள்ளடக்கங்களைப் பெற்று அவற்றிற்கு ஏற்றாற் போன்று நாவல் வகைகள் பெயர் பெறலாயின. உளவியல் நாவல் கருத்தமைவு நாவல் என்பன அவற்றுள் அடங்கத்தக்கச் சில சான்றுகள் ஆகும்.
இன்றைய நாவலாசிரியர்களுள் சிலர் தங்கள் நாவல்களில் பல நவீன உத்திகளைக் கையாண்டு புதியன படைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். இத்தகைய நிலையில், படைப்பாளரின் படைப்பாக்கத்திறனை ஆராயும் விதமாக இவ்வாய்வு அமைகிறது. எம். ஜி. சுரேஷ் நாவல்கள். புதிய முறையில் படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்தம் நாவல்களை ஆராயும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. இம்முயற்சியே ஆய்விற்கு அடிப்படையாக அமைகிறது.
தொகுப்பாய்வு, பகுப்பாய்வு, தனிநிலை ஆய்வு, பல்துறைக் கூட்டாய்வு, விளக்க ஆய்வு,அறிவியல் ஆய்வு என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாய்வேடு எட்டு இயல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.அவை
1. முன்னுரை
2. நாவல் இலக்கியமும் நவீனத் திறனாய்வுக் கோட்பாடுகளும்
3. எம். ஜி. சுரேஷ் நாவல்கள் ஓர் அறிமுகம்;
4. நாவல் கூறுகளும் ஆளுமைத் திறனும்
5. நாவல்களில் கருத்தியல் தளங்கள்
6. நாவல்களில் உளவியல் கூறுகள்
7. நாவல்களில் எதிர்காலவியல் பார்வை
8. முடிவுரை என்பனவாகும்
‘முன்னுரை’ என்னும் இயலில் ஆய்வுச் சுருக்கம், ஆய்வு நோக்கம், ஆய்வுப்பொருள், ஆய்வு முன்னோடிகள், ஆய்வு எல்லை, ஆய்வு அணுகுமுறை, ஆய்வேட்டின் அமைப்பு என்பன குறித்த செய்திகள் இடம் பெறுகின்றன.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இலக்கிய வடிவமைப்புகளைச் சுட்டிக்காட்டி அவற்றிற்குரிய காரணங்கள் ஆராயப்பட்டு அவற்றினடிப்படையில் அமைந்த நாவல்களின் வகைகள் இந்த இயலில் விளக்கப்பட்டுள்ளன. ஆய்வேட்டில் நவீனத் திறனாய்வு, இலக்கியக் கோட்பாடுகள் பல்வேறு இடங்களில் ஒப்பிட்டுக் காட்டும் நிலை உள்ளதால் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்குகின்ற முறையில் அனைத்துக் கோட்பாடுகளும் மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. நவீனத்துவக் கூறுகளாக வெளிவந்த பாவியல், கலைத்திறம், அகத்திறப் பாங்கியல், நடப்பியல், மிகை நடப்பியல், இருத்தலியல், பன்முகம் என்பன போன்ற சிறப்பான இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பும் பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கைப் பின்புலத்தால் உருவாகிறது. என்பதே நிதர்சனமான உண்மையாகும். அவ்வகையில் எம். ஜி. சுரேஷ் அவர்கள் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொள்வது அவசியம். ஆதலால், நாவலாசிரியரின்; வாழ்க்கைச் சூழலைப்புரிந்து கொள்வது அவசியம். ஆதலால், நாவலாசிரியரின் வாழ்க்கைச் சூழலும் படைப்புச் சூழலும் இவ்வியலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
மேலும், அவருடைய படைப்புகள் பற்றிய முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உருவத்தையும், உள்ளடக்கத்தையும், இலக்கிய வகைமையையும் கொண்டுள்ளன. எனவே, அவற்றை விளக்கும் விதமாக நாவல்களின் கதைச் சுருக்கம் இவ்வியலில் கொடுக்கப் பெற்றுள்ளது. படைப்பாளியின் பின்புலம், படைப்புத்திறன் ஆகியன ஆராயப்படுவதற்குப் படைப்பாளியின் அறிமுகம் தேவை என்ற நிலையிலேயே இந்த இயல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு படைப்பாளன் தான் வாழும் சமுதாயத்தில் கிடைத்த அனுபவங்களையே படைப்பாக்குகின்றான். அவனுடைய அனுபவங்களில் மேலோங்கியிருக்கும் தன்மையே ‘ஆளுமை’யாக வெளிப்படுகிறது. அவ்வகையில் தம்முடைய கற்பனையாலும் எழுத்தாற்றலாலும் தமிழ் இலக்கிய உலகில் தமக்கெனத் தனியிடம் பிடித்தவரான எம். ஜி. சுரேஷ் அவர்களின் நாவல் கூறுகளின் ஆளுமைத்திறன் ஆராயப்படுகிறது. மேலும், இவர்தம் நாவல்களில் இடம் பெறும் நாவல் கூறுகளான வடிவம், நடை, பாத்திரப் படைப்பு, உத்திகள் மற்றும் தலைப்பிடல் போன்ற கூறுகளை முழுமையாக வகைப்படுத்தி ஆராய்வதாக இவ்வியல் அமைந்துள்ளது.
வாழ்வியலைப் பற்றி ஒவ்வொரு படைப்பாளிக்கும் வெவ்வேறு விதமான கருத்தியல் பார்வைகள் உள்ளன. அரசியல் தளத்தில், பொருளாதாரத் தளத்தில் பண்பாட்டுத் தளத்தில், ஆண், பெண் உறவுத் தளத்தில், ஒட்டுமொத்த வாழ்க்கைப் பற்றிய மாறுபட்ட பார்வைகள் இருக்கலாம். இப்பார்வைகளினால் தான் ஒரு படைப்பாளி படைப்புகளைப் படைக்கிறான். அவ்வாறு படைக்கப்படும் படைப்புகளில் குடும்ப உறவுகள், உறவுசார் சிக்கல்கள், காதல், கலை, உளவியல், துப்பறிதல், அரசியல், வரலாறு, சமூகம் போன்றவற்றில் ஏதேனும்; ஒன்றோ பலவோ வெளிப்படத்தான் செய்யும்.
இந்நிலையில் எம். ஜி. சுரேஷின் நாவல்களில் இடம்பெற்றுள்ள கருத்தியல் தளம் மிகப்பரந்த தளத்தைக் கொண்டுள்ளது எனலாம். பல்வேறு கருத்தியல்களைக் கையாளுவதன் மூலம் தமிழ் நாவல்களின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார் எனற வகையில் இவ்வியல் அமைந்துள்ளது. மேலும் இவருடைய நாவல்களில் இடம்பெறும் வாழ்வியல், அரசியல், பொருளியல், வரலாற்றியல், பெண்ணியம், தலித்தியம், திரைப்படம், கடவுள், மதம் போன்ற பல்வேறு கருத்தியல்கள் இவ்இயலில் ஆராயப்பட்டுள்ளன.
நம் சமூகம், கல்வி, அறவியல், அறிவியல், அரசியல், பொருளியல் ஆகிய துறைகளில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு உளநலம் அவசியமானதாகும். அவ்வகையில் பல்வேறு தனிமனிதர்களின் சிந்தனைகள், உணர்வுப் போரட்டங்கள், வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றின் வெளிப்பாடாக நாவல் அமைகிறது. நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் உளவியலை ஆராய்வது நாவலாசிரியரின் படைப்பாளுமையை அறிந்து கொள்வதற்கும் துணை செய்வதை அறியமுடிகின்றது.
கடந்த காலத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை பற்றி அறிவியல் நோக்கில் ஓரளவு கணிப்பதே எதிர்காலவியல் ஆகும். ‘எதிர்காலவியல் என்பது ஓர் அனுமான விஞ்ஞானமாகும்’. நிகழ்காலச் சூழ்நிலைகள், நடப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு எதிர்காலத்தில் என்ன நிகழக்கூடும் என எண்ணிப்பார்ப்பதே இதன் சிறப்பாகும். ஏனெனில், வெறும் அனுமானம் மட்டுமே எதிர்காலவியல் ஆகாது. வரவிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது மற்றும் எதிர்கொள்வது என்பதை அறிவுறுத்துவதே எதிர்காலவியல் என்று இவ்வியல்லி ஆராயப்பட்டுள்ளது.
இந்நூற்றாண்டின் தொடக்கம் முதலே அறிவுத் துறைகள் எல்லாம் உலகளாவனவாகக் கொண்டு ஆராயப்படுவதால் நாவல் இலக்கியமும் அதனை ஒட்டியே வளர்ந்தது எனலாம். நவீன இலக்கியத் திறனாய்வு பெரும்பாலும் மேலை இலக்கியக் கோட்பாடுகளே என்ற நிலையும் ஏற்பட்டது. இலக்கியம் என்பது தான் படைக்கப்படுவதற்கான சமுதாயம், அரசியல், சமயம் போன்ற பண்பாட்டுச் சூழல்களுக்கேற்பப் பொருள் தரும் இயல்பினது. பல்துறைச் சூழலில் எழும் ஒரு படைப்பு அல்லது நூலின் பொருள், அச்சூழலின் பிற கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, பன்முகப் பார்வை படைப்பிலும், திறனாய்வுத் துறையிலும் வளர்ந்துள்ளது. நாவலாசிரியர் எம். ஜி. சுரேஷ் நாவல்கள் இத்தகு பன்முகப் பார்வைகளைக் கொண்டிலங்கின என்பதை ஆய்வு நெடுகிலும் காண முடிந்தது. படைப்பாக்கத்;திறன் மட்டுமல்லாமல் இலக்கியத் திறனையும் கோட்பாடுகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது.