ஆய்வு விளக்கம்
நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், வரலாறுகள், பண்பாடுகள் எண்ணங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை விளக்குவன நாட்டுப்புறப் பாடல்கள். நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், பழமொழிகள் கதைப்பாடல்கள் ஆகியவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். இவற்றுள் ஒன்றான கதைப்பாடல்களில் பல்வேறுபட்ட இனக்கதைப் பாடல்கள் உள்ளன. பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கதைப்பாடல்கள் உள்ளன. அவற்றில் திருநெல்வேலி மாவட்ட மறவரினக்கதைப் பாடல்களை ஆராய்ந்து கண்டறிவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
இவ்வாய்வு பகுப்பாய்வாகவும், விளக்கமுறை ஆய்வாகவும் அமைகிறது.
இல்லை
இவ்வாய்வேடு,
1. நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் விளக்கமும் வரலாறும்
2. மறவரின் வரலாறும் வாழ்வும்
3. இனவரைவியலும் கதைப்பாடல்களும்
4. மறவரினக் கதைப்பாடல்களில் சமூகப் பண்பாட்டுக் கூறுகள்
5. மறவரினக் கதைப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள்
என ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது.
திருநெல்வேலிக் சீமையைச் சேர்ந்த மறவர் பெருமக்கள் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர். அவர்களது பூர்வீகம் சேது நாடே எனவும் அங்கு வாழ்ந்த தலைவர்களுக்குள் ஏற்பட்ட போர்கள், பூசல்கள் காரணமாக மக்கள் குடிபெயர்ந்து திருநெல்வேலியை நோக்கிச் சென்றனர் எனவும் அறியப்படுகிறது. களக்காடு முதல் இராசபாளையம் வரை பரவிப் பெருகினர் எனத் தெரிய வருகிறது அவர்கள் புலம் பெயர்ந்த காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டாகும். இங்ஙனம் புலம் பெயர்ந்த மறவர்கள் கோட்டைகள் கட்டி ஆங்காங்கு காவல் புரியத் தொடங்கினர். அக்காலத்திலேயே சிங்கம்பட்டி, ஊற்றுமலை, வடகரை போன்ற இடங்களைச் சேர்ந்த மறவர் தலைவர்கள் ஆட்சிபுரிந்து வந்ததாக வாள் எழுவது 'குலவம்சம்' ஆகியவை கூறுகின்றன.
தென்பாண்டி நாட்டு மறவர்களின் வாழ்வில் மானமும், வீர தீரமும் தியாக உணர்வும் பெற்றிருந்த இடத்தைப் புலித்தேவன், வாண்டையத் தேவன், மெச்சும் பெருமாள் பாண்டியன் ஈனமுத்துப்பாண்டியன், சிவராமபாண்டியன், சீவலப்பேரிப் பாண்டியன் ஆகியோரது வாழ்க்கைகள் தெரியப்படுத்துகின்றன.