ஆய்வு விளக்கம்
பழந்தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வியல் முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் படம் பிடித்துக்காட்டும் பதிவுகளாய்த் திகழ்வன சங்க இலக்கியங்கள். சங்க காலத்துச் சான்றோர் பாடிய செய்யுள்களைத் தொகுத்து சங்க இலக்கியம் எனப் பெயரிட்டு வழங்கியதோடு மட்டும் அல்லாமல் குறுகிய அடிகளையுடைய பாடல்களைத் தனியாகத் தொகுத்து எட்டுத்தொகை என்றும், நீண்ட பாடல்கள் பத்தினைத் தொகுத்துப் பத்துப்பாட்டு என்றும் பெயரிட்டு வழங்கியுள்ளனர்.
பண்டைச் சமூக மக்களின் வாழ்வியல் சிந்தனைகளை உலகிற்கு உணர்த்தி நிற்கும் சங்க இலக்கிய நூல்களில் மதுவகைகளுள் ஒன்றான ‘கள்’ பற்றி மிகுதியாகப் பேசப்பட்டுள்ளது. அரசன் முதற்கொண்டு சாதாரனக் குடிமகன் வரை கள் அருந்தி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அரசர்கள் போருக்குப் புறப்படும் முன்னும், போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்த பின்னரும் தம்முடைய படைவீரர்களுக்குக் கள்ளையும் கறியையும் வழங்கிச் சிறப்புச் செய்துள்ளனர். இவ்வாறு பழந்தமிழ்ப் பண்பாட்டில் சிறப்புப் பெற்று விளங்கிய கள்ளை ஆய்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வு தொகுப்புமுறை, விளக்கமுறை மற்றும் ஒப்பீட்டுமுறை ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வேடு முன்னுரை மற்றும் முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களைக் கொண்டு அமைகிறது.
1. கள் பெயர் விளக்கமும் தயாரிப்பு முறையும்
2. கள் அருந்திய சூழல்கள்
3. கள்ளும் துணை உணவுகளும்
4. கள்ளால் பெற்ற சிறப்பு
என்பனவாகும்.
‘சங்கச் சமூகத்தில் கள்’ என்னும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வு நான்கு இயல்களாகப் பகுத்து ஆராயப்பட்டுள்ளது.
‘கள் பெயர் விளக்கமும் தயாரிப்பு முறையும்’ என்ற முதலாவது இயலில் கள்ளினைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாக அரியல். தசும்பு, தேறல், தேன் தோப்பி, நறவு, நனை, நறா, மட்டு, மட்டம், பிழி, மகிழ், மது, வேரி, நறவம், பதம் முதலான பதினாறு சொற்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது என்பதும் மேலும் ஊர், மலை, அரண்மனை, தனிமனிதன், அரசன் போன்றோரைக் ‘கள்’ என்னும் பெயரைச் சுட்டியே பண்டைய புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
கள் தயாரிக்கும் முறையை அடிப்படையாக் கொண்டு தனிக்கள், நெல்லின் அரியல்கள், நுங்கின்கள், இளங்கள், நாட்கள், முதுகள், அருங்கள், இன்கடுக்கள், கடுங்கள், வெங்கள், கலங்கள், தேறல் என கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவைதவிர சாராயம், தேங்காந்தாரம் முதலியவையும் கள்ளின் வகைகளாக விளங்கியுள்ளன. எனவே கள்ளின் வகைகள் அதனோடு கலக்கப்படும் பொருள்களை மையமிட்டு அமைகிறது என்பது புலனாகின்றது.
சங்ககால மக்கள் பனைமரத்துக் கள்ளைப் பருகியுள்ளனர். ஆனால் பனைமரத்திலிருந்து எவ்வாறு கள் இறக்கப்பட்டது என்ற குறிப்பை சங்க பாடல்களின் வழி அறிய இயலவில்லை. இவைதவிர உணவுக்காக பயிர் செய்த நெல் தினையரிசி முதலானவற்றிலிருந்தும் கள்ளைக் காய்ச்சி வடித்துள்ளனர்.
காடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் தேனைப் பயன்படுத்தி நறவு, பிழி முதலான கள் வகைகளைப் பழந்தமிழர் காய்ச்சி வடித்துள்ளனர். இக்கட் தெளிவைப் போருக்குச் செல்லும் வீரர்கள் விரும்பி அருந்தியுள்ளனர்.
பரதவ மகளிர் பேரலைகள் அடித்துக் கொண்டு வந்து கதை ஒதுக்கிய சந்தன மரத்தை எடுத்துச் சென்று தீ மூட்டிச்சமைத்து ‘தேறல்’ என்னும் கள்தெளிவைக் காய்ச்சி வடித்துள்ளனர்.
தற்கால மதுக்கடைகளில் போதை குறைவானதாக விற்கப்படும் மதுபானங்களைப் போல மக்கள் காமபானம், அமிர்தபானம், தேங்காந்தாரம் முதலிய மதுவகைகளைக் காய்ச்சி வடித்துள்ளனர். இவற்றுள் காமபானத்தைப் பெண்கள் ஆடவரோடு கூடி இன்புறும் வேளையில் பருகியுள்ளனர். அமிர்தபானம் என்பது கள்ளை விட மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் விளங்கியுள்ளது.