ஆய்வு விளக்கம்
தமிழரின் தொன்மைச் சிறப்பை விளக்குவன சங்க இலக்கியங்கள். அவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்பன. பல பாடல்களைத் தொகுத்து ஒரு தொகுதியாக்கி உள்ளனர். அவற்றுள் கற்பனை உலகங்களைப் பற்றியும், மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையினையும் புலவர்கள் பலபடப் பேசியுள்ளனர். பிற உலகங்களான துறக்கமும் நிரயமும் ஆய்வும் பொருளாகத் தெரிவு செய்யப்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தில் சொர்க்கமும் நரகமும் என்பது ஆய்வுப்பொருள்.
ஒப்பியல் அணுகமுறை, விளக்கமுறை அணுகுமுறை
சங்க காலத் தமிழரிடையே நல்லது செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. சங்க இலக்கியம் சுட்டும் துறக்கம் செல்லும் நெறி மக்களைப் பண்படுத்தும் நோக்கில் பாடப்பெற்றனவா? என்பது துறக்கம் பற்றிய எடுகோளாகும். அதுபோல அல்லது செய்யின் நரகம் கிட்டும் என்பது வழக்கு. களவொழுக்கத்திற்கு இடையூறு செய்பவர்களை நரகம் புகுமாறு சங்கப் புலவர்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது செய்வினையில் நரகம் அமையாது வசைமொழியில் நரகம் பற்றிய குறிப்பு இடம் பெறுவதும் நினைக்கத்தக்கது. இது நரகம் பற்றிய கருதுகோள் இவற்றைக் கருதுகோளாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது.
இயல் 1. முன்னுரை
இயல் 2. சொர்க்கம் நரகம் விவரங்களும் விவரிப்புகளும்
இயல் 3. சங்க இலக்கியத்தில் சொர்க்க நகரக் கோட்பாடு
இயல் 4. சொர்க்கம் நகரம் அமையும் நெறி
இயல் 5. வாழ்வின் முடிவு
இயல் 6. சொர்க்கம் நரகம்மம அமைந்தோர்
இயல் 7. முடிவுரை
சங்க இலக்கியத்தில் சொர்க்கம் நரகம்என்ற சொல்லாட்சிகள் இடம்பெறவில்லை. சொர்க்கத்தைத் ‘துறக்கம்’ என்ற சொல்லாட்சியும் நரகத்தை ‘நிரயம்’ என்ற சொல்லாட்சியும் புலப்படுத்துகின்றன. ‘துறக்கம்’ என்பதே சொர்க்கமாகத்திரிந்தது. சங்கப் புலவர்கள் ‘துறக்கம்’ என்ற சொல்லாட்சியை அருகியும், துறக்கம் என்ற பொருள் தரும் சொல்லாட்சிகளை மிகுதியும் பாடியிருப்பது ஒரு பொருள் குறித்த பல சொற்கள் சங்க காலத்தில் ஆளுமை பெற்றிருந்தமைக்குச் சான்றாகின்றன. நரகத்திற்கு ‘நிரையம்’ ‘நிரயம்’ என்ற சொற்றொடர்களே பயல்கின்றன. ‘உய்திஇல்லென’ என்பது நரகத்தினின்றும் நீங்குவதில்லை என்ற பொருளிலும் துறக்கப்வேறு கிட்டாது என்ற பொருளிலும் ஆளப்பெற்றுள்ளது.