ஆய்வு விளக்கம்
‘சங்க இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளின் தாக்கம்’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டுப்புற இலக்கியங்கள், சங்க இலக்கியத்தின் மீது தாக்கத்தைச் செலுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவியிருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் கருதுகோளாகும்.
ஒப்பாய்வு, தாக்கக்கோட்பாடு, விளக்க, பகுப்பாய்வு அணுகுமுறைகளை பின் பற்றப்பட்டுள்ளது.
இவ்வாய்வேடு,
1. ஆய்வு அறிமுகம்
2. சங்க இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியமும் பொதுப்பண்புகள் ஒப்பீடு
3. சங்க இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியமும் உருவமைப்பு ஒப்பீடு
4. சங்க இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியமும் உள்ளடக்க ஒப்பீடு – அகம்
5. சங்க இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியமும் உள்ளடக்க ஒப்பீடு – புறம்
6. சங்க இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியமும் உத்திமுறை ஒப்பீடு
7. ஆய்வு முடிவுகள்
ஆகிய இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்திற்கும், நாட்டுப்புற இலக்கியத்திற்கும் இடையே நிலவும் பொதுப்பண்புகளின் அடிப்படையில் இருபதுக்கும் மேற்பட்ட நிலைகளில் ஒப்பாய்வு செய்வதற்கான களங்கள் விரிந்து கிடக்கின்றன.
நாட்டுப்புறத் தாலாட்டுப்பாடல்களின் தாக்கம் சங்கப் பாடல்களின் மீது விழுந்ததால் அவற்றில் தாலாட்டுப்பாடல்களின் சாயல்கள் இடம்பெற்றன. சங்க இலக்கியத்தில் கலித்தொகைப் பாடல்கள் இத்தாக்கத்தினை முதன்முதலாகப் பெற்றவை. இதற்குப்பின் வந்த இலக்கியங்களில் இத்தாக்கம் அதனை ஒரு தனி இலக்கிய வகையாகக் கொள்ளுமளவுக்கு வளர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
சங்கப் பாடல்களில் காணப்படுகின்ற யாப்பிலக்கணம் சார்ந்த பாடலின் ஓசை ஒழுங்கும், அசை – அமைப்பும் அவற்றுக்கு நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தால் கிடைத்த கொடைகளாகும்.